(எம்.மனோசித்ரா)

"அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சுரக்ஷா காப்புறுதி திட்டத்தில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளன. 43 இலட்சம் மாணவர்களுக்கு காப்புறுதி வழங்குவதற்காக அரசாங்கத்தால் 2700 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஜூன் மாதம் வரையில் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 52 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட மிகுதி பணத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளது" என இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயளாலர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி ஆசிரியர் சங்கத்தால் ஜனாதிபதிக்கு கடிதமொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில்,

"சுரக்ஷா காப்புறுதி திட்டம் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்படும் இத் திட்டத்தை இந்திய காப்புறுதி நிறுவனம் ஒன்றுக்கு மீள் காப்புறுதியாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்வி அமைச்சிற்கு 100 மில்லியன் மேலதிக வருவாயாக கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை எதிர்காலத்தில் 500 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பது மாத்திரமே தற்போதைய கல்வி அமைச்சின் நோக்கமாக்க காணப்படுகின்றது. 

இவ்வாறான செயற்பாடுகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அதே வேளை இது அரச விதிமுறைகளை மீறிய ஒரு செயலாகவும் காணப்படுகின்றது. எனவே மாணவர் நலனுக்காக உருவாக்கப்பட்ட செயற்திட்டத்தில் இலாபம் ஈட்டும் நடவடிக்கையை நாம் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை. இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணையொன்றை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். எனவே தான் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்." எனதெரிவித்தார்.