இதுவரை மீள் வழங்கப்படாதுள்ள பொது மக்களின் காணிகள்  உரிய  காணி உரிமையாளர்களிடம் மிக விரைவாக வழங்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. 

அத்துடன் இலங்கை மேற்கொண்டு வரும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை மீட்கும் முயற்சிகளுக்கும் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

வொஷிங்டனில் கடந்த சில தினங்களாக நடைபெற்ற இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பங்குடமை கலந்துரையாடலின் பின்னர் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையிலேயே இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. 

அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள மேலும் சில முக்கிய விடயங்கள் வருமாறு,

இலங்கையின் ஜனநாயகத்தைப் பலப்படுத்தவும் நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சிப்படுத்தல்,  நீதி மற்றும் நல்லிணக்கம்,  பாராளுமன்ற செயற்பாடுகள் போன்றவற்றை வலுப்படுத்தவும் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது. இதேவேளை கடந்த வருடத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களை அமெரிக்கா வரவேற்கின்றது.

விசேடமாக அரசியலமைப்பின் 19 ஆவது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டமை சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டமை மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இணை அனுசரனை வழங்கியமை, விசாரணைப் பொறிமுறையொன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தமை போன்றவற்றை குறிப்பிட்டுக் கூற முடியும்.

அந்த வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அமெரிக்கா   ஆதரவை வழங்கும். இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பலமான நட்புறவு கட்டியெழுப்பப்படுவதை இரண்டு நாடுகளும் அங்கீகரித்துள்ளன. எதிர்வரும் காலங்களில் இலங்கையின் பொருளாதாரத்தில் அமெரிக்கா மிக அதிகளவு முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளது. 

இதேவேளை இதுவரை மீள் வழங்கப்படாதுள்ள பொது மக்களின் காணிகள்  காணி உரிமையாளர்களிடம் மிக விரைவாக வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். அத்துடன்  பயங்கரவாத தடைச் சட்த்திற்கு பதிலாக சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அமைவாக மாற்றீடு ஒன்றை மேற்கொள்ளவுள்ள இலங்கை அரசாங்கத்தின் முயற்சிக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும். 

மேலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பு கூட்டுறவை பலப்படுத்த வேண்டுமென இரண்டு நாடுகளும் திட்டமிடுகின்றன.