இன்று ஒகஸ்ட் முதலாம்  திகதி முதல் 7 ஆம் திகதி வரை உலக தாய்ப்பால் வாரம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியம் என்பதை உலக சுகாதார நிறுவனம் பல ஆச்சரியமான தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி உலகில் பொருளாதார அளவில் பின்தங்கிய மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் பிறக்கும் சுமார் எட்டு கோடி குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதில் பல சவால்கள் இருக்கிறது. இவர்களுக்கு முறையாக தாய்ப்பால் கிடைப்பதில்லை. அதே போல் தெற்காசிய நாடுகளில் மூன்று கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குழந்தை பிறந்தவுடன் தாயாரின் மார்பகத்தில் சுரக்கும் சீம்பாலின் வைத்திய பலனைப் பற்றி முழுமையாக பெண்கள் அறிந்திருக்கவில்லை. இந்த சீம்பால் ஒவ்வொரு குழந்தைக்கும் முக்கியமானது.

அதன் வளர்ச்சிக்கும், அந்த குழந்தையின் நோயெதிர்ப்பு சக்திக்கும் இந்த சீம்பாலில் போதிய அளவிற்கு ஊட்டச்சத்து நிறைந்திருக்கிறது. அதே போல் இந்த சீம்பாலை புகட்டுவதன் மூலம் பிறந்து முதல் மாதத்திலேயே மரணத்தைச் சந்திக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 22 சதவீதம் வரை தடுக்கப்படுகிறது. அதே போல் குழந்தைகள் பிறந்து முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பாலை மட்டுமே புகட்டுவது ஆரோக்கியமானது.

அதே போல் ஒரு சில பெண்களுக்கு தாய்ப்பால் போதிய அளவிற்கு சுரக்கவில்லை என்றால் அவர்கள் உடனடியாக வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையையும், அவர்கள் காட்டும் வழிமுறையையும் பின்பற்றவேண்டும். அப்போது தான் எதிர்கால சமுதாயம் ஆரோக்கியமாக இருக்கும். தாய்ப்பாலை தயக்கமின்றி புகட்டுவோம். பிள்ளைகளின் வருங்கால ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவோம்.