வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிலுள்ள மாதர் பனிக்கர்ம கிழங்குளம் பகுதியில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளதாகவும் தற்போது சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

வவுனியா, ஓமந்தை மாதர் பனிக்கர்ம கிழங்குளம் பகுதியில் வசித்து வந்த ஜெ. நிரோசன் குடும்பஸ்தர் உறவினர் ஒருவரின் பூப்புனித நீராட்டுவிழா இடம்பெற்று மறுதினமான நேற்று இரவு மதுபான விருந்துபசாரம் இடம்பெற்றுள்ளது. 

இதில் கலந்துகொண்டு உறவினர்களுடன் இணைந்து மது அருந்திய நிலையில் நேற்று இரவு குறித்த குடும்பஸ்தரை அவரது வீட்டில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளார். இரவு அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது இதையடுத்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது எனினும் வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எனவே குடும்பஸ்தரின் உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதுடன் அருந்திய மதுவில் விஷம் கலந்திருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிகத்தகவல்களை சடலத்தின் வைத்திய பரிசோதனைகளுக்குப் பின்னரே தெரியப்படுத்தப்படும் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.