மெக்சிக்கோவில் 97 பயணிகள் உட்பட 101 பேருடன் பயணித்த விமானமானது விபத்துக்குள்ளானதில் 85 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணமான டுராங்கோவில் உள்ள விமான நிலையத்திலிருந்து 97 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் உட்பட 101 பேருடன் ஏரோமெக்சிகோ எனும் விமானம் மெக்சிகோ சிட்டியை நோக்கி புறப்பட்ட வேளை சில நொடிகளிலேயே திடீர் என தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 85 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் இருவரின் நிலை கவலைக்கிடமாகவும் உள்ளது. எனினும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இந்த விபத்து சம்பவம் குறித்து டுராங்கோ மாகாண ஆளுநர் ஜோஸ் ரோசாஸ் குறிப்பிடுகையில், விமானம் புறப்படும் போது நிலவிய மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது, புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்து ஏற்பட்டதால், விமான நிலையத்திற்கு அருகே உள்ள நிலத்தில் விமானம் அவசர தரையிறப்பட்டது என தெரிவித்தார்.