இலங்கையிலிருந்து நியுசிலாந்திற்கு கல்விகற்பதற்கு செல்வதற்கான விசா தொடர்பில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள நியுசிலாந்து அதிகாரிகள் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை  ஆராயும் மும்பயிலுள்ள நியுசிலாந்தின் குடிவரவு அலுவலகம் தனக்கு இந்த வருடம் கிடைத்த இரகசிய தகவல்களை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் போது இந்த மோசடி குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.

இந்த விசாரணையின் போது நியுசிலாந்தில் கல்விகற்பதற்காக விண்ணப்பிக்கும் மாணவர்களிற்கு உதவும் நோக்குடன் நிறுவனமொன்று போலியான ஆவணங்களை தயாரித்தமை தெரியவந்துள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்ட இலங்கையின் கல்விநிறுவன முகவர்கள், நிதிநிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் விபரங்களை அதிகாரிகள் நியுசிலாந்தின் குடிவரவுதுறை அமைச்சரிடம் வழங்கியுள்ளனர்.

88 விண்ணப்பங்களை தீவிரமாக ஆராய்ந்த அதிகாரிகள் போலியான 83 ஆவணங்களை நிராகரித்துள்ளனர்.

போலியான ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்காக மாணவர்கள் மேலதிக கட்டணத்தை வழங்கியதாக தெரிவிக்கப்படுவது குறித்தும் அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர்.