தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் தவிர்க்க முடியாத இடம்பெற்ற இயக்குநர் ஷங்கரின் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

பிரம்மாண்ட இயக்குநர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட இவர், தமிழ் சினிமாவின் வணிக எல்லையை தமிழகம் தாண்டி இந்தியாவிலும், உலக அளவிலும் விரிவுப்படுத்தியவர்.

ஹொலிவூட்டில் அறிமுகமாகும் பல நவீன தொழில்நுட்பங்களை தன்னுடைய படைப்புகளில் புகுத்தி புதுமை படைத்தவர் ஷங்கர். பாடல் காட்சிகளின் போது படமாளிகையை விட்டு வெளியேறிய ரசிகர்களை படமாளிகையிலேயே தக்க வைக்க புதிய புதிய உத்திகளை கையாண்டு ஆச்சரியப்படவைத்தவர்.

இப்படி இவரின் திரையுலக சாதனை பட்டியலிட்டுக் கொண்டேப் போகலாம்.

இப்போது எதற்கு இதெல்லாம்.. என்றால் இயக்குநர் ஷங்கர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த வெள்ளிவிழாவை அவரிடம் பணியாற்றிய அனைத்து உதவி இயக்குநர்களும் ஒரு விழாவாக நடத்தி அசத்தியிருக்கிறார்கள்.

குறித்த விழாவில் அவரின் உதவியாளர்களாக இருந்து இன்று முன்னணி இயக்குநர்களாக மிளிரும் அட்லீ, அறிவழகன், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் உள்ளிட்ட பலரும் பங்குபற்றினர்.

இதன் போது அவருடைய உதவியாளர்கள் அனைவரும் தனித்தனியாக தங்களின் குருவுடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை கட்டுரையாக வடிவமைத்து, அதனை புத்தகமாக்கி, அதனை தங்களின் குருவான இயக்குநர் ஷங்கரிடம் நினைவுப் பரிசாக அளித்தனர்.

இதைப்பெற்றுக் கொண்ட இயக்குநர் ஷங்கர்,‘ இன்றைய தினம் எம்முடைய வாழ்நாளில் மறக்க முடியாத நாள். அனைவரும் இன்னும் நல்லநிலைக்கு வரவேண்டும். அவர்களின் அன்பால் நெகிந்துவிட்டேன்.

இவர்கள் அனைவரும் இல்லாமல் எம்முடைய இந்த பயணம் சாத்தியமில்லை.’ என தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் .

ஷங்கர் தான் வித்தியாசமான படைப்பாளி என்றால் அவரது உதவியாளர்கள் அவரை விட வித்தியாசமானவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் என்கிறார்கள் திரையுலகினர்.