நல்லின மாடுகளுக்கு விஷம் வைத்து கொலைசெய்யும் மர்மச் சம்பவம் ஓரிரு தினங்களாக வவுனியாவில் அதிகரித்து வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா தட்டான்குளம் பகுதியில் நேற்று மதியம் கால்நடைகளுக்கு விசம் வைத்துகொலைசெய்த சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் வசித்துவரும் பெண் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக தட்டான்குளம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், நேற்று அப்பகுதி மக்களின் முறைப்பாட்டினையடுத்து பொலிசார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தட்டான்குளம் பகுதி மக்கள் தெரிவிக்கும்போது, 

வாழ்வாதாரத்திற்கான எமது பகுதியிலுள்ள மக்களினால் வளர்க்கப்பட்ட 6 நல்லின மாடுகள் நேற்று பிற்பகல் விசம் வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பெண்ணின் வீட்டிற்கு அருகில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து அப் பெண்மணி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது .இதையடுத்து அப்பெண்மணியைக் கைது செய்யுமாறு பொலிசாருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கால் நடை வைத்தியர்களின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று குறித்த விசம் வைத்து கால்நடைகளை கொலை செய்தாகத் தெரிவிக்கப்படும் பெண்ணைக்கைது செய்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் இறந்த நிலையில் காணப்பட்ட கால்நடைகள் அகற்றப்பட்டது. 

இதேவேளை, இன்று காலையில் வயல் வெளியில் ஒரு மாடு இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.  இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட குறித்த பெண் அநுராதபுரம் பகுதியில் கடமையாற்றும் பொலிசார் ஒருவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.