கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது இந்திய அணியிடம் திறமையும் வலுவும் நிறைந்த வேகப்பந்து வீச்சு குழாம்  உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலைஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீசு;சு குழாம் இவ்வாறான பல்வேறு திறன் கொண்டவர்களை கொண்டிருப்பது வழமைக்கு மாறான விடயம் என தெரிவித்துள்ள  குக் இது கடந்த பத்து வருடங்களில் காணப்படாத விடயம்  நான் அவர்களிற்கு எதிராக கடந்த பத்து வருடங்களாக விளையாடியுள்ளேன் ஆனால் இவ்வாறான வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பொறுமையாக விளையாடினால் அவர்களால் இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்களிற்கு சவால் விடுக்க முடியும் எனவும் குக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ரகானேயும் இந்திய வேகப்பந்து  வீச்சாளர்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் கடந்த காலங்களில் பந்து வீசிய அனுபவமும் தென்னாபிரிக்காவில் எங்கள் வேகப்பந்து வீச்சாளர்களிற்கு கிடைத்த அனுபவமும் இங்கிலாந்து சூழலில் சிறப்பாக விளையாட கூடிய பலத்தை வேகப்பந்து வீச்சாளர்களிற்கு வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிரணியை நிலைகுலையச்செய்யக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் எங்களிடம் உள்ளனர் ஆனால் பொறுமையாக நிதானமாக துல்லியமாக பந்துவீசவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.