பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் உடல்நிலை மோசமடைந்ததால் அவருக்கு  லண்டனில் வைத்து சிகிச்சையளிக்க பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பனாமா ஊழல் வழக்கில் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் சிறைவைக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு சிறுநீரக பாதிப்பும், நெஞ்சு வலியும் ஏற்பட்ட நிலையில் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர் இஸ்லாமாபாத்திலுள்ள பாகிஸ்தானின் அறிவியல் வைத்தியசாலையில்  இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இருதய சிகிச்சை பிரிவில் நவாஸ் செரீப்  சிகிச்சை பெற்றுவரும் விடுதி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே குறித்த வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த போதிலும் நவாஸ் செரீப்பின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

எனவே அவருக்கு லண்டனில் வைத்து சிகிச்சை அளிக்க பாகிஸ்தான்  அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில், அனேகமாக எதிர்வரும் இரண்டாம் திகதி அவரை லண்டன் அழைத்துச்செல்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.