இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை எட்ஜ்பஸ்டன் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த இருபதுக்கு 20 போட்டித் தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இடம்பெற்ற ஒருநாள் போட்டித் தொடரை இங்கிலாந்து அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது.

இதனையடுத்து இவ் இரு அணிகளும் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை புதன்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

இதன் பிரகாரம் நாளை களமிறங்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி குழாமில் அஸ்வீன், பும்ரா, தவான், ஜடேஜா, தினேஸ் கார்த்திக், குல்தீப் யாதவ், மொஹமட் ஷெமி, கருண் நெய்ர், ஹர்த்தீக் பாண்டியா, புஜாரா, ராகுல், இஷான் சர்மா, முரளி விஜய் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ரூட் தலைமையில் களமிறங்கும் இங்கிலாந்து அணி குழாமில் மொஹின் அலி, அண்டர்ஸன், பிரிஸ்டோ, ப்ரோட், பட்லர், குக், ஜெனிங்ஸ், செம் குரன், ஜென்னிங், மலன், பொர்ட்டர், ரஷித் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.