கிழக்கு மாகாணத்திலும் பதுளை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறிப்பாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறியளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை மொனராகலை, அம்பாறை, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.