(க.கமலநாதன்)

உதவி செய்தவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்பது புத்தரின் போதனையாகும். எனவே ஐக்கிய தேசிய கட்சிக்கு நன்றி செலுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தோல்விக்கான வியூகங்களை வகுத்து செயற்படுகின்றார் என தூய்மையான ஹெல உறுமய கட்சி  குற்றம் சாட்டுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இவ்வாறான அரசியல் செயற்பாடுகள் புதிய கட்சி ஒன்று தோன்ற வழிசெய்வதாக  அமைந்துள்ளன.  அத்துடன்  மீண்டும் மஹிந்த தலைமையிலான ஒரு அணி உருவாகவும் பிரதான காரணமாக அமைந்துள்ளதென தூய்மையான ஹெல உறுமய கட்சியின்  தலைவர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை வெற்றிபெற செய்தவர்களுக்கு துரோகம் செய்ய நினைக்காமையால்   சு.க.வின் அமைச்சர்கள் சிலரையும் இணைத்துக்கொண்டு தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்கு தேவையான அரசியல் செயற்பாடுகளை  முன்னெடுத்து வருகின்றார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளர்கள் நாட்டில் பெரும் எண்ணிக்கையில்  உள்ளனர். அதனால் சுதந்திர கட்சியின் தலைவர் என்ற வகையில் அவர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாது அரசியல் பயணத்தை தொடர முற்படுவாராயின் அந்த பயணம் நீண்ட தூரம் தொடராது.

கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே   அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.