ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடிப் பிரதேசங்களில் பல இலட்ச ரூபாய் பெறுமதியான கட்டட நிர்மாண உபகரணங்களை வாடகைக்குப் பெற்றுக் கொண்டவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஏறாவூர் மற்றும் வாழைச்சேனைப் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக தலைமறைவாகியுள்ள சந்தேக நபர் தேடப்பட்டு வருவதாகவும் இவ்விரு பொலிஸ் நிலையங்களினதும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் காளி கோயில் வீதியைச் சேர்ந்த இச்சந்தேக நபர் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவெம்பு பிரதேசத்தில் திருமணம் முடித்துள்ளார் எனவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நபரினால் வாடகைக்குப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கட்டிட நிர்மாண உபகரணங்கள் பல மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் மீளக் கையளிக்கப்படவில்லை என்றும் அப்பொருட்களை சந்தேக நபர் வேறு பகுதிகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்திருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.