(எம்.சி.நஜிமுதீன்)

எதிர்க்கட்சித் தலைமைப் பதவி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு வழங்கப்பட வேண்டும் என அகில இலங்கை உள்ளூராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைவர் உதயனி அத்துகோரல தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

பாராளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பழைமையான உறுப்பினர். எனவே அவருக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பதவி வழங்குவதில் எவ்விதப் பிழையும் இல்லை. ஆகவே அவருக்கு அந்தப் பதவி வழங்கப்படுமிடத்து எதிர்க்கட்சிக்குரிய பணிகளை உரிய வகையில் மேற்கொண்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பார்.

நாட்டில் தற்போது எதிர்க்கட்சியொன்று இல்லையென்றே குறிப்பிட வேண்டும். ஆகவே உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி இல்லாமையினால் கூட்டு எதிர்க்கட்சி எதிர்க்கட்சிக்குரிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் அதற்கு பாராளுமன்றில் உரிய சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்களாளிக் காட்சிபோல் செயற்பட்டு வருகிறது. அது ஜனநாயக அரசியல் கலாசாரத்திற்குப் புறம்பானதாகும் என்றார்.