(எம்.எம்.மின்ஹாஜ்)

மக்களுக்கு எத்தகைய சேவை செய்தும் பிரயோசனமில்லை. சேவை செய்வது நாமேயாகும். ஆனால் தேர்தலில் மொட்டுக்கும் படகுக்குமே வாக்களிக்கின்றனர். ஆகவே 2020 ஆம் ஆண்டு தேர்தலில் எதிரணிக்கு மக்கள் வாக்களித்தால் தான் அரசியலில் இருந்து உடன் ஒய்வு பெறுவேன் என அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிர்பாசன இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாம் அரசியல் அநாதையாக விரும்பவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு எவ்வளவோ சேவை செய்துள்ளோம். சிமெந்து வழங்கினோம். வீதிகளை நிர்மாணித்து கொடுத்தோம். வீடுகளை நிர்மாணித்து கொடுத்தோம். பாலம், பாடசாலை உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தோம். அதற்கு அப்பால் அரசாங்கம் என்ற ரீதியில் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்தோம். அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்தோம். சம்பளத்தை அதிகரித்தோம். இது போன்று பல சேவைகளை செய்துள்ளோம்.

கிராம மட்டத்தில் நாம் பல்வேறு வேலைகளை செய்துள்ளோம். எந்தவொரு கிராமத்தையும் விட்டு விடாமல் அபிவிருத்தி திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்துள்ளோம். ஆனால் இது தொடர்பில் மக்கள் கவனம் செலுத்துவதில்லை. நாம் எவ்வளவு சேவை செய்தாலும்  பிரயோசனமில்லை.

சேவை செய்வது நாம். ஆனால் வாக்களிப்பது மொட்டுக்கும் படகுக்குமே வாக்களிக்கின்றனர். ஆகவே 2020 ஆம் ஆண்டு தேர்தலில் எதிரணிக்கு மக்கள் வாக்களித்தால் தான் அரசியலில் இருந்து உடன் ஒய்வு பெறுவேன்.