இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி ஐந்து விக்கெட்டுக்களினால் அசத்தலாக வெற்றியீட்டி தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

அந்த வகையில் இன்று தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் ஆரம்பமான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி இலங்கை அணி 34.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக குசல் பெரேரா 81 ஓட்டங்களையும் திஸர பெரேரா 49 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

இந் நிலையில் 194 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கியது தென்னாபிரிக்க அணி. ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கிய அஸிம் அம்லா மற்றும் டீகொக் ஜோடியினர் தென்னாபிரிக்க அணிக்காக 31 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது.

இதன் பின்னர் 4.3 ஓவருக்கு அகில தனஞ்சயவின் பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் அஸிம் அம்லா பொல்ட் முறையில் ஆட்டமிழக்க இவரையடுத்து களமிறங்கிய அடீன் மர்க்ரம் வந்த வேகத்திலேயே அகில தனஞ்சயவின் அடுத்த பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனையடுத்து டீகொக்குடன் கைகோர்த்து அணித் தலைவர் டூப்பிளஸ்ஸி பொறுமையாக ஆட அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை பதம் பார்த்த இருவரும் 20 ஆவது ஓவர்கள் நிறைவின் போது அணியின் ஓட்டத்தை 112 ஆக உயர்த்தினர். 

அதன் பின்னர் அகில தனஞ்சய வீசிய 20.3 ஓவரில் டீகொக் 59 பந்துகளுக்கு 59 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை சுரங்க லக்மாலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து 23.1 ஓவரில் தென்னாபிரிக்க அணி 129 ஓட்டங்களை பெற்றிருந்தபோது அணித் தலைவர் டூப்பளஸ்ஸி 56 பந்துகளை எதிர்கொண்டு 47 ஓட்டங்களுடன் சந்தகனின் பந்து வீச்சில் மெத்தியூஸிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இதன்பின்னர் களம்புகுந்த டேவிட் மில்லிர் 27.2 ஓவரில் சுரங்க லக்மலின் பந்து வீச்சில் 10 ஓட்டங்களை பெற்றிருந்தபோது எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேறினார். 

இறுதியாக தென்னாபிரிக்க அணி 31 ஓவர்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி நிர்ணயித்த வெற்றி இலக்கினை இலகுவாக கடந்தது. போட்டியில் டுமினி 32 பந்துகளை எதிர்கொண்டு 53 ஓட்டங்களையும் வில்லிம் முல்டர் 14 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.

இலங்கை அணி சார்பாக அகில தனஞ்சய 50 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களையும் லக்ஷான் சந்தகன் 74 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் சுரங்க லக்மால் 37 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக தென்னாபிரிக்க அணி சார்பாக 33 ஓட்டங்களை கொடுத்து நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றிய சம்ஸி தெரிவு செய்யப்பட்டார்.

இப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இவ் இரு அணிகளுக்குமான இரண்டாவது ஒருநாள் போட்டி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக ( 2:30 பி.ப) எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.