(ஆர்.ராம்)

எமது கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலே அடுத்த ஜனாதிபதி தோதலில் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார் என பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியின் செயலாளர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர். 

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தரப்பு பலமுனைகளில் தயாராகி வருகின்ற நிலையில் தற்போது கூட்டாட்சியைத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற பிரதான கட்சிகள் ஜனாதிபதி தேர்தலை முகங்கொடுப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன என்பது தொடர்பாக வினவியபோதே அக்கட்சியின் செயலாளர்கள்  மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இவ்விடயம் சம்பந்தமாக கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ, 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக்கட்சி தலைமையிலான பாரிய கூட்டணியின் சார்பில் வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றோம். சு.க பொதுவேட்பாளரை ஒருபோதும் முன்னிறுத்தவில்லை. எதிர்காலத்திலும் நிறுத்தப்போவதில்லை என குறிப்பிட்டார்.

இவ் விடயம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வேட்பாளரை களமிறக்குவதே எமது இலக்காகும். ஆந்த வேட்பாளர் பொதுவேட்பளராக இருப்பாரா இல்லையா என்பது அச்சூழலின் பிரகாரம் தீர்மானிக்கப்படும் என்றார்.