தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி நலமாக இருக்கிறார் என்றும், அவருடைய இரத்த அழுத்தம் சீராகிவிட்டது என்றும் காவேரி வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

கருணாநிதிக்கு டிரக்யோஸ்டமி என்ற சுவாசத்திற்கான குழாய், சத்திர சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. இந்த குழாய் ஆறுமாதத்திற்கு ஒரு முறை மாற்றப்படுவது இயல்பானது. அந்த வகையில் அண்மையில் இந்த குழாய் மாற்றப்பட்டபோது, அவருக்கு லேசான காயச்சல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு வீட்டிலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவருக்கு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டது. அதற்கான சிகிச்சையை அளிப்பதற்காக அவர் மீண்டும் காவேரி வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அவருடைய இரத்த அழுத்தத்தில் சமச்சீரின்மை ஏற்பட்டது.இருப்பினும் தொடர்ந்து வைத்திய சிகிச்சையளிக்கப்பட்டது. பிறகு அவரின் இரத்த அழுத்தம் சீராகி, உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது அவர் நலமாக இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்கள் காவேரி வைத்தியசாலை வைத்தியர்கள்.

இதனிடையே தி.மு.க.வின் செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து, கலைஞரின் உடல் நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், கலைத்துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் நேரில் வருகை தந்து விசாரித்தனர்.

இந்நிலையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் காவேரி வைத்தியசாலை, அவருடைய கோபாலபுரம் வீடு மற்றும் தி.மு.க. கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயம் என அனைத்து இடங்களிலும் கட்சியின் தொண்டர்களும், விசுவாசிகளும், கட்சியின் நிர்வாகிகளும் குவிந்துள்ளனர். இவர்களை கட்டுப்படுத்துவற்காக  ஏராளமான பொலிஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி, தமிழக அரசு விரிவான ஏற்பாடுகளையும் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.