வவுனியாவின் சில கிராமங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பெயரைப் பயன்படுத்தி சிலரால் பணம் பெறப்படுவதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 

வவுனியாவில் உள்ள பல கிராமங்களில் தம்மை மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர் எனத் தெரியப்படுத்தும் சிலர் மக்களை அதில் இணையுமாறு கூறி தம்முடன் பலரையும் இணைத்து வருவதுடன், அவர்களிடம் இருந்து மூவாயிரம் ரூபாய் வரையிலான பணமும் அறவிடப்படுகின்றது. 

திரிய பவுண்டேசன் என்ற அமைப்பே தம்மை மனித உரிமைகள் அமைப்பாக வெளிப்படுத்தி சமூக மட்டத்தில் செயல்திறன் மிக்கவர்களை தம்முடன் இணைத்து அவர்கள் மூலம் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி மக்களை இணைத்து வருகின்றனர். 

இதன்போது தாம் மனித உரிமைகள் ஆணைக்குழு எனத் தெரிவித்தே மக்களை இணைப்பதாகவும், அவர்களிடம் பணம் பெறப்படுவதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பில் திரிய பவுண்டேசனின் வடக்குக்கான இணைப்பாளர் ஜோன் றிச்சட் செபத்தியான் அவர்களிடம் கேட்ட போது,

நாம் ஓரு மனித உரிமைகள் அமைப்பு. நாம் எமது அமைப்பில் அங்கத்தவர்களை இணைத்து வருகின்றோம். அவர்களிடம் இருந்து அங்தவர் பணமாக 1000 ரூபாவும், மனித உரிமை அடையாள அட்டைக்கு 500 ரூபாயும், மனித உரிமைகள் சீருடைக்கு 1000 ரூபாயும், மாதாந்தம் அங்கத்தவர் சந்தாவாக 500 ரூபாயும் பெறுவதாக தெரிவித்ததுடன், நாம் யாரையும் கட்டாயப்படுத்தி பணம் சேர்க்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.