(எம்.எம்.மின்ஹாஜ்)

துரிதமாக நாடு வளர்ச்சியடைய வேண்டுமாயின் சமாதானம், நல்லிணக்கம் அவசியமாகும். அதனை ஏற்படுத்தினால் மாத்திரமே வளர்ச்சிமிகு நாட்டை உருவாக்க முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் 'தெரிந்தால் கற்பியுங்கள் தெரியாவிட்டால் கற்றுக்கொள்ளுங்கள்' என்ற 2017 ஆம் ஆண்டுக்கான வானொலி நிகழ்ச்சியின் சிறப்பு பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவ, மாணவியரை பாராட்டும் தேசிய வேலைத்திட்டம்  அமைச்சர் மனோ கணேசனின் ஏற்பாட்டிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நான் இந்த அரங்கிற்கு வந்த பின்னர் எனக்கு வழங்கப்பட்ட நூலில் பதுளை உடவெல மத்திய மகா வித்தியாலய மாணவன் சதுரங்கவின் கட்டுரையை வாசித்தேன். இந்த கட்டுரையில் அவர் கூறியதாவது, இலங்கை வளர்ச்சி பாதையை நோக்கி வேகமாக பயணிக்கும் நாடாகும். வளமானதும் அழகானதுமானமான நாடாகும். நாட்டின் வளர்ச்சியை மேலும் முன்னேற்றகரமானதாக மாற்ற வேண்டுமாயின் இங்கு வாழும் மக்கள்  இன,மத பேதமில்லாமல் ஒன்றிணைய வேண்டும். அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்க கூடிய ஆற்றல் மொழிக்கு மாத்திரமே உண்டு. இனங்களுக்கிடையிலான பாலமாக மொழி விளங்குகின்றது என அந்த மாணவன் எழுதிய அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. மாணவன் சதுரங்கவின் கருத்துக்கு நானும் நூறு வீதம் இணங்குகின்றேன். 

துரிதமாக நாடு வளர்ச்சி அடைந்தால் சிறந்த எதிர்காலம் கிடைக்கும். இல்லையென்றால் நாம் வெளிநாட்டுக்கு சென்றே வாழ வேண்டி ஏற்படும். ஆகவே துரிதமாக நாடு வளர்ச்சியடைய வேண்டுமாயின் சமாதானம், நல்லிணக்கம் அவசியமாகும். அதனை ஏற்படுத்தினால் மாத்திரமே வளர்ச்சிமிகு நாட்டை உருவாக்க முடியும். 

1967 ஆம் ஆண்டு நான் பாடசாலையில் இருந்து வெளியேறும் போது இலங்கை உலகின் தலைசிறந்த நாடாக இருந்தது. ஏனைய நாடுகளை விடவும் சிறப்பாக இருந்தது. ஆகையால் நான் இங்கிலாந்து செல்லாமல் நாட்டிலேயே இருக்க வேண்டும் என தீர்மானித்தேன். இலங்கையினால் வளர்ச்சி அடைய முடியுமென நாம் எதிர்பார்த்தோம். 

இந்த காலப்பகுதியில் மலேசியாவில் தமிழர்களுக்கும் மலே மக்களுக்கும் இடையில் இனவாத குழப்பம் ஏற்பட்டது. எனினும் அந்த கலவரத்திற்கு பின்னர இதுவரை எந்தவொரு கலவரமும் அந்நாட்டில் ஏற்படவில்லை. அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதுடன் இலங்கையை விட தலைசிறந்த அபிவிருத்திமிகு நாடாக மலேசியா பரிணமித்துள்ளது.

மலேசியாவின் இனவாத கலவரத்தை  பார்த்த பின்னர் சிங்கப்பூரும் தமது நாட்டில் இனவாத கலவரங்கள் ஏற்படால் இருப்பதற்கு அதிதீவிரமாக செயற்பட்டது. இதன்படி சீன, மலே மற்றும் ஆங்கில மொழிகளை அரச மொழியாக சிங்கப்பூர் பிரகடணப்படுத்தியதுடன்  குறித்த மொழிகளை கட்டாயமாக்கியது. தற்போது சிங்கப்பூர் ஏனைய நாடுகளை விட தலைநிமிர்ந்து காணப்படுகின்றது. சிங்கப்பூர் பிரஜைகளின் வருமானம் அமெரிக்க பிரஜைகளின் வருமானத்திற்கு சமமாகும். 

ஆனால் இலங்கையை நாம் நோக்கும் போது 1978 ஆம் ஆண்டு துரிதமான அபிவிருத்தியை நோக்கி இலங்கை பயணித்து கொண்டிருந்தது. எனினும் 1983 ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது. அதன்பின்னர் இன,மத,மொழி ரீதியாக இலங்கையராகிய நாம் பிளவுப்பட்டோம். நாடு என்ற வகையில் யுத்தம் செய்தோம். யுத்தம் நிறைவடைந்தது. எனினும் ஐக்கியம் ஏற்படவில்லை. எதிர்காலம் தொடர்பில நம்பிக்கை வைக்க முடியாத நிலைமை உருவானது. ஆகவே நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்தோம். இதனை கொண்டு ஐந்து வருடங்களுக்கு சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தினோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து அரசாங்கம் அமைத்தோம். இரு பிரதான கட்சிகளும் இணைவது என்பது கடினமான காரியமாகும். எனினும் அதனை பொறுட்படுத்தாமல் ஒன்றிணைந்தோம் என்றார்.