(எம்.எம்.மின்ஹாஜ்)

மாகாண சபை தேர்தலை பழைய முறைமையில் நடத்துவதா? அல்லது புதிய முறைமையின் கீழ் நடத்துவதா? என்பது தொடர்பில் கட்சி தலைவர்களுக்கிடையே இணக்கபாடு எட்டப்படவில்லை. ஆகையால் தேர்தலை நடத்துவதில் தொடர்ந்தும் இழுபறி நிலைமையே ஏற்பட்டுள்ளது. 

சிறுபான்மை கட்சிகள் பழைய முறைமையில் நடத்த வேண்டும் என கோரியதுடன் சுதந்திரக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் புதிய முறைமையில் நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதன்படி இணக்கம் ஏற்படாமையின் காரணமாக அடுத்த வாரமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சி தலைவர்கள் கூடி ஆராயவுள்ளனர்.

மாகாண சபை தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது தொடர்பான விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இன்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக லக்ஷமன் கிரியெல்ல, கூட்டு எதிர்க்கட்சி சார்பாக தினேஷ் குணவர்தன,  தமிழ் முற்போக்கு முன்னணி சார்பாக அமைச்சர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானாந்தா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.