எல்லைக் கடந்து மீன் பிடிக்கவேண்டாம் என்று ராமேஸ்வர மீனவர்களுக்கு பா. ஜ .கவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் இல கணேசன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

‘லஞ்சம் கொடுப்பவருக்கும் தண்டனை என்ற சட்டத்தை பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது பெருமையான வி‌டயமாகும்.

 தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறவினருக்கு இராணுவ விமானம் வழங்கியது குறித்து நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது. ஏனெனில் தமிழகத்தில் வீதிகளில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவரை காப்பாற்றும் நோக்கத்தில் தனது காரில் வைத்தியசாலைக்கு  எடுத்துச் செல்லும் அமைச்சரின் செயற்பாடு கூட தவறு என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது. 

தமிழக ஆளுநர் ஆய்வுப்பணி நடத்துவதை தவறு என மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். தி.மு.க.வினர் இதற்காக போராட்டங்களை நடத்துகின்றனர்.  ஆளுநரின் ஆய்வை எதிர்க்கும் மு.க.ஸ்டாலின், அவரிடம் ஏன் கோரிக்கை மனுவை கொடுக்கிறார்? அதனால் இந்த விடயம் தேவையற்ற முறையில் பெரிதுபடுத்தப்படுகிறது.  

தமிழக அரசை கலைக்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயற்பட்டால் பொதுமக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். தமிழக பா.ஜனதாவை பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை ஆதரிக்கிறோம். என்னுடைய பார்வையில் அரசு நன்றாகத்தான் செயற்படுகிறது. 

ஒருசில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயற்படுவதால் தேர்தல் கூட்டணி வருமா? என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. சொத்து வரி உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ராமேசுவரம் மீனவர்கள் விவகாரத்தில் எல்லைத் தாண்டி மீன்பிடிக்க வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.’ என்றார்.