பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் கட்சி கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது எனவும் இதே நிலைமை நீடித்தால் இம்ரான் கான் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது எனவும் அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் 5 ஆண்டுகால ஆட்சி கடந்த மே மாதம் முடிவடைந்தது.

இதையடுத்து 272 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

அதேபோல் அங்குள்ள பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்–பக்துங்க்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் 30க்கும் மேற்பட்ட கட்சிகள் 3,459 வேட்பாளர்களை நிறுத்தின.

எனினும் ஆட்சியை கைப்பற்றுவதில் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் கட்சி மற்றும் மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையேற்றுள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவியுள்ளது.

நேற்று மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

230 தொகுதிகளுக்கான ஓட்டுகளை எண்ணியபோது இம்ரான் கானின் தெஹ்ரீக் கட்சி 90 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 52 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 30 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.

இதர கட்சி வேட்பாளர்கள் 52 இடங்களில் கூடுதல் வாக்குகளை பெற்றிருநந்தனர்.

இதே நிலைமை நீடித்தால் இம்ரான் கான் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.