இந்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலியல் துஸ்பிரயோக குற்றவாளிகள் 17 பேரின் அடையாள அணிவகுப்பு நீதவான் நீதிபதி முன்னிலையில் இன்று இடம்பெற்ற போது குறித்த துஸ்பிரயோக குற்றவாளிகளை சிறுமி அடையாளம் காட்டினார். 

அயனாவரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7 ஆம் தரத்தில் கற்கும் 11 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பில் குடியிருப்பில் மின்னுயர்த்தி இயக்குபவரான ரவிக்குமார் மற்றும் காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக சிறுமியை மிரட்டி பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுவந்தமை விசாரணையில் தெரிய வந்தது.

கைதான 17 பேரும் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை சட்டத்தரணிகள் சிலர் சுற்றி வளைத்து தாக்கியமையும் குறிப்பிடத்தக்கது.. இதைதொடர்ந்து குற்றவாளிகள் 17 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில் புழல் சிறையில் பாலியல் துஸ்பிரயோக குற்றவாளிகள் 17 பேரின் அடையாள அணிவகுப்பு நீதவான் நீதிபதி முன்னிலையில் இன்று இடம்பெற்றது.

இதற்காக எழும்பூர் நீதவான் நீதிபதிகளான கலைபொன்னி, ரோகித் ஆகியோர் கலந்துகொண்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரும் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

இதன்போது குறித்த துஸ்பிரயோக குற்றவாளிகளுடன் அவர்களது சம வயதுடைய மேலும் 10 கைதிகள் நிறுத்தப்பட்டனர். அவர்களில் குற்றவாளிகள் 17 பேரையும் சிறுமி அடையாளம் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது..