பாகிஸ்தான் - குவெட்டா நகரில் வாக்கு சாவடிக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 31 பேர் பலியானதோடு 35 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தானில் 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 3,459 வேட்பாளர்களும், 577 மாகாண சட்டசபை தொகுதிகளுக்கு 8,396 வேட்பாளர்களும்  போட்டியிடுகின்றனர்.

வாக்குப்  பதிவிற்காக நாடு முழுவதும் 89,000 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்கு பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.

இந் நிலையில் அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில்  பொலிஸ் வாகனத்தை இலக்கு வைத்து குண்டுவெடிப்பு நடந்துள்ளது.  இத் தாக்குதலில் 31 பேர் 31 பேர் பலியானதோடு 35 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். 

இச் சம்பவத்தால் காயங்களுக்குள்ளானோரில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தேர்தலுக்கு முன் பிரசாரம் மற்றும் பேரணியின்பொழுது முக்கிய தலைவர்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதல்களில் 180க்கும் அதிகமானோர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.