மன்னாரில் நடைபெற்று வரும் மனித எச்சங்களுக்கான அகழ்வு பணிகளை பார்வையிடுவதற்காக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக அதிகாரிகள் இருவர் மன்னாருக்கு வருகை தந்து நேரடியாக பார்வையிட்டதுடன் நிலைமைகளை அறிந்தும் கொண்டனர்.

மன்னார் சதொச விற்பனை கட்டுமானப் பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து இன்றுடன் 41 ஆவது தினங்களாக இவ் அகழ்வுப் பணி மன்னாரில் இடம்பெற்றுள்ளன.

இன்று வரைக்கும் 32 எலும்புக்கூடுகள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் 52 எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் அடையாளமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் அகழ்வுப் பணியின்போது 75 சென்றி மீற்றர் நீளம் கொண்ட எலும்புக்கூடு ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளதால் இது ஒரு சிறுவருடையதாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் கொழும்பு அலுவலகத்திலிருந்து இரு அதிகாரிகள் இன்று இவ் பகுதிக்கு வருகை தந்து இங்கு நடைபெற்று வரும் அகழ்வு பணிகளை நேரடியாக பார்வையிட்டதுடன் நிலைமைகளையும் இதற்கு பொறுப்பாக இருக்கும் சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.