நுண் நிதிக்கடன் சுமைகளிலிருந்து மக்களை மீட்பதற்காக வகுக்கப்படுகின்ற திட்டங்கள் அம் மக்களுக்கு மேலும் சுமைகளை ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர்  இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நுண்நிதிக்கடன் சுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட்டுறவு அமைப்புகளினூடாக இலகு கடன்களை வழங்கி குறித்த சுமையிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டு கூட்டுறவு அதிகாரிகளால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 

நுண்கடன் சுமை மக்களை பெரிதும் தாக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது. எனவே அவர்களை முழுமையாக இந்த சுமையிலிருந்து மீட்க வழிவகை செய்ய வேண்டும். இல்லையேல் அவர்கள் மீண்டும் கடன் சுமைகளுக்கு உள்ளாக நேரிடும்.

எனவே நுண் நிதிக்கடன் சுமைகளிலிருந்து மக்களை மீட்பதற்காக வகுக்கப்படுகின்ற திட்டங்கள் அம் மக்களுக்கு மேலும் சுமைகளை ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும் என்றார்.