வட்டுக்கோட்டை பகுதியில் தனியார் வகுப்புக்கு சென்ற பதின்ம வயது சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கினார் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு உள்ள ஆசிரியரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

குறித்த வழக்கு நேற்றைய தினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது ஆசிரியர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி ஆசிரியரை பிணையில் விடுவிக்க வேண்டும் என பிணை விண்ணப்பம் செய்தார். 

அதனையடுத்து மாணவிகளின் உறவினர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அர்ஜூனா "ஆசிரியருக்கு பிணை வழங்கினால் வழக்கினை திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடலாம், வழக்கில் தொய்வு நிலை ஏற்படும் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது மக்கள் விரக்தியில் உள்ளதால், அவரை பிணையில் விடுவிக்க கூடாது என விண்ணப்பம் செய்தார். 

இரு சட்டத்தரணிகளின் விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான் மூத்த சட்டத்தரணியின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்து , ஆசிரியரை எதிர்வரும் ஆகஸ்டம் மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.