முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகளை மீண்டும்  உருவாக்குவதே தமது இலக்கு என்று அண்மையில் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவினர் விஜயகலாவிடம் தொடர்ந்து 3 மணித்தியாலங்கள் விசாரணைகளை நடாத்தியுள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவினர் விஜயகலாவின் வீட்டில் வைத்து நேற்று பிற்பகல் 3 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையில் விசாரணைகளை நடாத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

விசாரணையில் விஜயகலா ,

தான் ஐக்கிய தேசிய கட்சியின் வளர்ச்சி குறித்தே மேடையில் பேசியதாகவும் ஒரு போதும் விடுதலைப் புலிகளை மீள உருவாக்குவதை நோக்கமாக கொண்டு செயற்படுபவர் அல்ல என்றும் கூறியுள்ளார்.

மேலும் தான் அந்த வார்த்தை பிரயோகத்தை கூறிய காலத்தில் யாழில் இடம்பெற்ற குற்றச் செயல்களால் ஏற்பட்ட மன சோர்வினாலும், விரக்தியினாலுமே அவ்வாறன வார்த்தைப் பிரயோகம் தன்னையும் அறியாமல் வெளிப்பட்டு விட்டதாகவும் கூறியதாக விசாரணை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

தனது பேச்சு, ஊடகங்களில் ஒலிபரப்ப பட்டதன் பின்னரே தனது வார்த்தைப் பிரயோகங்களின் பாரதூரத்தன்மையை உணர்ந்ததாகவும் விஜயகலா தெரிவித்துள்ளார்.