(எம்.சி.நஜிமுதீன்)

அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் ஆகிய வற்றுக்கு அடுத்தபடியாக சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தை நல்லாட்சி அரசாங்கம் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காகவே அந்நிறுவனத்தை நஷ்டம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியுள்ளதாக “ நீதிக்கான குரல்” அமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சுதர்மன் ரதலியகொட தெரிவித்தார்..

“நீதிக்கான  குரல்” அமைப்பு ஏற்படு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் ஊடங்கள் மீதும் ஊடகவியாலாளர்கள் மீது அடக்கு முறையைக் கையாழ்கிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பெயர்களை குறிப்பிட்டு விமர்சமனம் செய்கிறார். அத்துடன் சிலர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஷவின் ஆட்சிகாலத்தில் ஊடகங்கள் மீது பெருமளவில் அச்சுறுத்தல் இருந்ததாக குறிப்பிடலாம்.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து முன்னெடுக்கும் இந்த ஆட்சியில்தான் பெருமளவில் ஊடக அச்சுறுத்தல் நிலவுகிறது. இருந்த போதிலும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஊடகங்கள் குறித்து இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு எவ்வாறிருந்தது என்பது குறித்து அனைவருக்கும் தெரியும். ஆகவே தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு நேரதிராகவே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. 

அத்துடன் ஊடகங்களில் ஒலி, ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் தொடர்பிலும் அரசாங்கம் ஏதோவொரு வகையில் கெடுபிடிகளை கையாள்வதற்கு முயற்சிக்கிறது. மேலும் முன்னைய ஆட்சியின்போது ஊடக அடக்குமுறை இடம்பெறுவதாகக் குறிப்பிட்டு பல அமைப்புகள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வந்தன. எனினும் அவ்வமைப்புகள் தற்போது நாட்டில் இடம்பெறும் ஊடக அடக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதாக இல்லை. ஏனெனில் அவ்வாறான அமைப்புகள் ஏதோவொரு விடயத்திற்காக இந்த அரசாங்கத்திற்குக் கட்டுப்பட்டுள்ளது.

மேலும் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தை நஷ்டமீட்டும் நிறுவனமாக்கியுள்ளனர். எனினும் குறித்த நிறுவனம் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 31 திகதி வரை இலாபமீட்டும் நிறுவனமாக காணப்பட்டது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மூலம் நஷ்டம் எனக் குறிப்பிட்டு சீன நிறுவனத்திற்கு அதனை வழங்கியுள்ளனர். 

அதேபோல் மத்தள விமான நிலையத்தையும் நஷ்டம் எனக் குறப்பிட்டு தற்போது இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு முனைகின்றனர். அவ்வாறே சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தையும் நஷ்டம் எனக் குறிப்பிட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரபல அமைச்சர் ஒருவருக்கு விற்பனை செய்துவிடுவர். அதற்கான தயார்படுத்தல்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதனை தாம்  பொறுப்புடன் கூறிக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.