தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாவட்டம் தோறும் சென்று ஆய்வு நடத்துவதை பொதுமக்கள் ஆதரிக்கிறார்கள் என்று பா. ஜ. க. மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது,

‘பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி ஆகியவற்றுக்கான தேர்தல் ஒரே நேரத்தில் நடக்கலாம். அதற்கான கட்சிப்பணிகளை மேலூரில் இருந்து தொடங்கி உள்ளோம். பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என டி.டி.வி தினகரன் கருத்து கூறியுள்ளார். 

ஆனால், ஏற்கெனவே அமித்ஷா ஊழல்வாதிகளுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்து விட்டார். ஸ்டெர்லைட் ஆலை மூலம் அந்தப்பகுதி மாசடைந்துள்ளதாக சுற்றுச்சூழல் துறை மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளது. 

இதேபோல சேலம் தோல் தொழிற்சாலை, திருப்பூர் உள்ளிட்ட சாயப்பட்டறை செயற்படும் பகுதிகளிலும் நிலத்தடி தண்ணீர் மாசடைந்தது உண்மை. இதனை ஆய்வு செய்ய வேண்டும். 

தூத்துக்குடி சம்பவம் போல், சேலம் பகுதியில் நடைபெறாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீர் கடலில் கலந்து வீணாவதை அரசு தடுக்க வேண்டும்.

 இதற்காக தஞ்சை பகுதிகளிலுள்ள ஏரி, குளங்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும். ஆளுநர் பதவி என்பது திரையரங்கில் உள்ள தீ தடுப்பு வாளி போன்றது. ஆளுநரின் ஆய்வை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. பொது மக்கள் ஆதரிக்கிறார்கள்.’ என்றார்.