இன்று காலை செம்மணிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மனித எச்ச அகழ்வு பணிகள் நன்பகலுடன் பூர்த்தியாகியுள்ளது.

இன்றைய தினம் காலை எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கபட்ட பகுதிகளில் சட்டவைத்திய அதிகாரி, வைத்திய அதிகாரியின் குழுவினர்கள்,  தடயவியல் பொலிசார் ஆகியோர் இணைந்து காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அகழ்வு பணிகளில் ஈடுபட்டனர். 

எழும்புக்கூட்டு எச்சங்கள் இருந்ததாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியின் மேற்பரப்பை இயத்திரத்தின்  (பெக்கோ) உதவியுடன் அகழ்ந்து எழும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்ட பகுதிகளை சுற்றி மண் வெட்டி மற்றும் சிறு உபகரணங்களால் மண் அகழப்பட்டது. 

அதன் போது நில மட்டத்தில் இருந்து 75 சென்ரி மீற்றர் (இரண்டரை அடி ) ஆழத்தில் எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டன. 

மண்டையோட்டின் பின் பகுதி , கால் மூட்டின் சில பகுதிகள் என சொற்ப அளவிலான எழும்புக்கூட்டு எச்சங்களே மீட்கப்பட்டன.  இடுப்பு பகுதி ,  தாடை பகுதி. முள்ளந்தண்டு பகுதிகள் , உள்ளிட்ட பெருமளவான பகுதிகள் மீட்கப்படவில்லை. 

இதனால் மீட்கபட்ட எழும்பு கூட்டு எச்சங்கள் ஆணினதா ? பெண்ணினதா ? என்பதனை கூட உடனடியாக அறிய முடியாத நிலை காணப்படுகின்றது. 

ஏனைய எழும்புகூட்டு எச்சங்கள் முன்னதாக அகழ்ந்து செல்லப்பட்ட மண்ணுடன் சென்று இருக்கலாம். அல்லது உக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 

இதேவேளை எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கபட்ட பகுதியில் மேலும் அகழ்வுகள் நடத்தப்பட்டன. 150 சென்ரி மீற்றர் (ஐந்தடி) வரையில் மண் அகழ்ந்து பரிசோதிக்கப்பட்டது. அதன் போது வேறு எச்சங்கள் மீட்கப்படவில்லை. 

மீட்கபட்ட எழும்பு கூட்டு எச்சங்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டன. அவை மருத்துவ ஆய்வுகளுக்கு உட்படுத்திய பின்னரே மேலதிக தகவல்களை தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.  

எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கபட்ட பகுதி 1987 / 89 ஆம் ஆண்டு காலபகுதியில் இந்திய இராணுவத்தின் பிரச்சனம் உள்ள இடமாக இருந்ததாகவும் , அதன் பின்னரான கால பகுதிகளில் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டில் இருந்து பின்னர் 1995ஆம் ஆண்டு யாழ்.குடாநாட்டை இராணுவத்தினர் கைப்பற்றிய பின்னர் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியாக காணப்பட்டதாகவும், இராணுவ கட்டுபாட்டில் இருந்த கால பகுதியில் எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதி ஊடாக இராணுவத்தினரின் முன்னரங்க பாரிய மண் அரண் காணப்பட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.