இந்தியா - சென்னையில் இன்று காலை மின்சார ரயிலின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த பயணிகள் 5 பேர் தடுப்புச்சுவரில் மோதி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு பரங்கிமலை ரயில் நிலையத்தில் சீமேந்து தடுப்பு சுவரில் மோதி 2 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். 

இந் நிலையில் இன்று காலை அதே இடத்தில் அதே சுவரில் மோதி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இன்று அதிகாலை வழக்கம் போல மின்சார ரயில் சேவை ஆரம்பித்த போதும் காலை 7 மணி அளவில் கோடம்பாக்கம்-மாம்பலம் இடையே உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததனால் கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயில்கள் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வரும் மின்சார ரயில்கள் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

அனைத்து மின்சார ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

மின்தடை பற்றி தகவல் அறிந்ததும் ரயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று உயர்மின் அழுத்த வயர்களை சீரமைத்தனர்.

இப் பணி முடிவடைவதற்கு சுமார் 2 மணி நேரம் ஆனதனால் கடற்கரை முதல் தாம்பரம் வரை அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு அதிகரித்தது.

மின்சார ரயிலை எதிர்பார்த்து அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் காத்து கொண்டே நின்றனர். 2 மணி நேரத்திற்கு பிறகு அனைத்து ரயில்களும் தாமதமாக சேவையை தொடங்கின. நீண்ட நேரமாக காத்து நின்றதால் பயணிகள் அனைவரும் கிடைத்த ரயில்களில்  ஏறி ரயில் பெட்டி வாசலிலும் தொங்கி கொண்டே பயணம் செய்தனர்.

காலை 8.25 மணிக்கு குறித்த ரயில் பரங்கிமலை ரயில் நிலையத்துக்குள் தாமதம் காரணமாக சற்று வேகமாக  வந்துள்ளது.

இதற்கிடையே குறித்த ரயில் வழக்கமான மேடைக்குள்  செல்லாமல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் மேடைக்குள் திருப்பி விடப்பட்டு இருந்ளது. இதுதான் இன்று காலை நடந்த பரிதாப விபத்துக்கு காரணமாகி விட்டது என கூறப்படுகிறது.

எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் மேடைக்குள் இருந்த சீமேந்து தடுப்பு சுவரை ரயில் பெட்டி வாசல்களில் தொங்கிக் கொண்டு வந்த பயணிகள் கவனிக்கவில்லை.

ரயில் மேடைக்குள் நுழைந்ததும் தொங்கிக் கொண்டு இருந்த பயணிகளில் ஒருவரது முதுகில் தொங்கவிட்டு இருந்த பை சீமேந்து தடுப்பு சுவரில் மாட்டிக் கொண்டுள்ளது.

இதனால் குறித்த பயணி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவரோடு சேர்த்து அவர் அருகில் தொங்கிக் கொண்டு இருந்த 8 பயணிகள் அடுத்தடுத்து சீமேந்து தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்துள்ளனர்.

சீமேந்து தடுப்பு சுவரில் மோதிய வேகத்தில் 3 பயணிகள்  சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர். 6 பயணிகள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.

9 பயணிகள் கீழே விழுந்த தகவல் அறிந்ததும் ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் அலறியடித்தபடி கீழே இறங்கினார்கள்.உடனடியாக ரயில்வே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவும், இன்று காலையிலும் அடுத்தடுத்த சம்பவங்களில் 7 பேர் உயிர் இழந்து இருப்பதால் இதுபற்றி ஆய்வு செய்ய ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.