தமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்புக் கூடுகள் மற்றும் காணப்படும் புதைகுழிகள் குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் செம்மணியில் எலும்புக் கூடுகள் காணப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்க கருத்து வெளியிடுகையிலையே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

செம்மணியில் எலும்புக் கூடுகள் மீட்கப்படுகின்றன. மன்னார் புதைகுழிகள் தோண்டப்படுகின்றன. இவ்வாறு எமது தாயகப்பகுதிகளில் மனித எலும்புக் கூடுகளும், மனித எச்சங்களும் மீட்கப்படுவதுடன் பல இடங்களிலும் மனிதப் புதைகுழிகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. 

பொதுத்தேவைகள் அல்லது சொந்தத் தேவைகளுக்கான நிலங்களைத் தோண்டுகின்ற போது இவ்வாறு மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டும் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டும் வருகின்ற நிலையில் அவை குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது. 

ஆகவே அந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற காலப் பகுதியில் அத்தகைய நிலம் தோண்டுகின்ற பணிகள் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு பணிகள் தொடருவதாயின் நீதிமன்ற அனுமதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதைவிடுத்து விசாரணைகள் இடம்பெறுவதற்கு முன்னதாக தொடர்ந்தும் பணிகளை முன்னெடுக்க முடியாது. 

இதே வேளை எங்கு எல்லாம் எலும்புக் கூடுகள் மீட்கப்படுகின்றவோ அல்லது புதைகுழிகள் கண்டு பிடிக்கப்படுகின்றன அங்கெல்லாம் அவை குறித்து உரிய விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு விசாரணைகள் முன்னெடுப்பதனூடாகவே எதிர்காலத்தில் புதைகுழிகள் இல்லாத நிலைமை காணப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.