பெங்களூரின் முக்கியமான வீதி சமிஞ்ஞைகளில்  எமதர்மன் வேடமிட்டு  தலைகவசம் அணியாதவர்களையும் வீதி விதிகளை மீறி வருபவர்களையும்  நபர்  ஒருவர்  எச்சரிக்கை விடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலைகவசம் அணியாதவர்கள், வீதி விதிகளை மீறி வருபவர்களை பிடித்து அவர் எச்சரிக்கை விடுத்து வருகிறார். பொலிஸார் தான் வீரேஷை பணியமர்த்தியுள்ளதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், நிஜம் வேறு. கடந்த மாதம் வீரேஷின் மூத்த சகோதரர் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தலைகவசம் அணியாமல் மோட்டார் சைக்களில் சென்ற சகோதரர் விபத்துக்குள்ளாகி, இரண்டு நாட்கள் கோமாவிலிருந்து பின்னர் உயிரிழந்தார். தலைகவசம்  அணிந்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் என வைத்தியர்கள் வீரேஷிடம் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து, தனது சகோதரர் விபத்துக்குள்ளான வீதிகளில் சில நாட்களாக வீரேஷ் சுற்றி வந்துள்ளார்.

அப்போது, பலர் தலைகவசம் அணியாமலும், வீதி விதிகளை மதிக்காமலும் சென்று வந்ததை பார்த்து வேதனை அடைந்த வீரேஷ், தன்னால் முடிந்த அளவு விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளார். தனக்கு தெரிந்த மேடை நாடகத்தில் வேஷம் கட்டும் திறமையை வைத்தே அந்த பணியை வீரேஷ் செய்து வருகிறார்.

‘தலைகவசம் அணியாமல் மோட்டார் சைக்களில் செல்பவர்களை நான் எச்சரிக்கும் போது பலர் என் மீது கோபப்படுவார்கள். குறித்த நபர்களிடம் பொறுமையாக எனது சகோதரனுக்கு நடந்த நிலையை கூறுவேன். அதில் ஒருவராவது திருந்தி  தலைகவசம் அணிவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’ என வீரேஷ் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.