இந்தியா – உத்திரப் பிரதேசத்தில் 10 ரூபாயை தொலைத்ததால் தனது 3 குழந்தைகளையும் மின் கம்பத்தில் கட்டி கொடூரமாக தந்தையே தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசம் ஜலால் நகரைச் சேர்ந்த அஸ்லாம் என்பவருக்கு இக்ரா என்ற மகளும் ரெஹான் மற்றும் அயான் என இரண்டு மகன்களும் உள்ளனர்.

அஸ்லாம் தனது 3 பிள்ளைகளிடமும் 10 ரூபாயை கொடுத்து பொருட்களை வாங்கும்படி சந்தைக்கு அனுப்பியுள்ளார்.

சந்தைக்கு சென்ற பிள்ளைகள் தந்தை கொடுத்த 10 ரூபாயை தொலைத்து விட்டனர். வீட்டிற்கு பணம் இல்லாமலோ அல்லது தந்தை கொடுத்த பணத்திற்குரிய பொருட்கள் இல்லாமலோ வீட்டிற்கு சென்றால் தந்தை திட்டுவார் என பயந்து சந்தையிலேயே வெகு நேரமாக பணத்தை தேடிக் கொண்டிருந்துள்ளனர்.

சந்தைக்கு சென்ற பிள்ளைகள் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராத காரணத்தால் அஸ்லாம் பிள்ளைகளை தேடி சந்தைக்குச் சென்றுள்ளார்.

தந்தையை கண்ட பிள்ளைகள் தங்களது பணம் தொலைந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அஸ்லாம் 3 பிள்ளைகளையும் மின் கம்பத்தில் கட்டி தொங்க விட்டு கொடூரமாக தாக்கியுள்ளார்.

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் பிள்ளைகளை தந்தையிடம் இருந்து மீட்டுள்ளனர்.

பிள்ளைகளை மீட்டதோடு அயலவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தந்தையை கைது செய்ததோடு பிள்ளைகளிடமும் விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையில் பிள்ளைகள் மூவரும் தந்தை கொடூரமாகத் தாக்கியதை பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அஸ்லாம்க்கு எதிராக பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.