கடும் மழையின் காரணமாகவோ அல்லது வெள்ளத்தின் காரணமாகவோ தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்குவதும், தண்ணீர் வேகமாக அப்பகுதியை கடப்பதும் சாதாரணமாக நிகழும் நிகழ்வு. ஆனால் இத்தகைய நிகழ்விற்கு பின்னர் மக்களில் பலர் Leptospirosis என்ற நோயின் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.

இந்த நோயின் பாதிப்பு மனிதர்களுக்கு விலங்குகளின் சிறுநீர்களால் ஏற்படுகிறது. மழையின் போது எலிகள், நாய்கள், ஊர்வன போன்றவை வெளியேற்றும் சிறுநீர் இத்தகைய மழை நீருடன் கலந்துவிடுகின்றன. 

இதனை அறியாத மக்கள் அந்த வெள்ள நீரில் நடந்து செல்லும் போது தோல் பகுதிகளின் ஊடாக இத்தகைய நோயை பரப்பும் பக்டீரியாக்கள் உடலுக்குள் செல்கின்றன. ஒரு சிலர் இத்தகைய தருணங்களில் சுத்திகரிக்கப்படாத நீரை பருகுவதாலும் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். 

வேறு சிலர் கண்கள், வாய், மூக்கு வழியாகவும் இத்தகைய நீர் உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். இதனால் அவர்களின் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன. அத்துடன் கல்லீரல் செயலிழப்பிற்கும் காரணமாகின்றனர். இதனால் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் உரிய காலத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் மரணத்தை சந்திக்கின்றனர்.

கடுமையான காய்ச்சல், கடுமையான தலைவலி, சளி, தசை வலி, வாந்தி, மஞ்சள்காமாலை, கண்கள் சிவத்தல், கடுமையான அடிவயிற்று வலி, வயிற்று போக்கு போன்ற அறிகுறிகளை காட்டும். இந்த நோயின் பாதிப்பு ஒவ்வொருவரின் நோயெதிர்ப்பு சக்தியைப் பொறுத்து இரண்டு தினங்கள் முதல் நான்கு வாரங்கள் வரை இருக்கும்.

இதற்கான பரிசோதனையின் போது பாதிக்கப்பட்ட நோயாளியின் முழுமையான ஆரோக்கிய வரலாற்றைத் தெரிந்து கொண்ட பின்னர் சிகிச்சையை தீர்மானிக்கிறார்கள் வைத்திய நிபுணர்கள். இதற்கு தற்போது மருந்துகள், ஊசிகள் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன.

இருப்பினும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்கள் வைத்தியர்களை கலந்து ஆலோசனை செய்யாமல் மருந்துகளை சாப்பிடக்கூடாது. அதற்கு முன் இத்தகைய பாதிப்பிலிருந்து தற்காத்துக கொள்ளவேண்டும் என்றால், வீட்டில் வளர்க்கும் செல்லபிராணிகளுக்கு முறையாக மருத்துவபரிசோதனையை செய்து தடுப்பூசியை செலுத்த வேண்டும். 

சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி பராமரிப்பதில் மற்றவர்களுடன் சேர்ந்து கூட்டாக பணியாற்றவேண்டும். வெள்ளம், பெருமழை போன்ற தருணங்களில் எம்முடைய ஆரோக்கியத்தை மனதில் வைத்துக் கொண்டு நிவாரணப்பணிகளில் ஆர்வம் காட்டவேண்டும்.

டொக்டர் பாக்யராஜ்

தொகுப்பு அனுஷா.