(எம்.சி.நஜிமுதீன்)

நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டு வரப்போவதில்லை. மாறாக வடக்கில் உள்ள மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவே இவ்வாறான கதைகளை கட்டவிழ்த்து விடுகின்றது என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்தப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அரசியலமைப்பை மாற்றுவதற்காகவே அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேசத்திடம் தெரிவித்துள்ளார். 

அவ்வாறெனின் ஏன் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வர முனைய வேண்டும். அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் மக்கள் விடுதலை முன்னணியும் அங்கம் வகிக்கிறது. ஆகவே வழிநடத்தல் குழுவிலேயே அது குறித்து பேசித் தீர்மானித்திருக்கலாம். அதனைவிடுத்து 20 ஆவது திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை.

ஆகவே நல்லாட்சி அரசாங்கம் அரசியலமைப்பை மாற்றப்போவதில்லை. வடக்கிலுள்ள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கே புதிய அரசியலமைப்பு கொண்டுவரவுள்ளதாக கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. மேலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றிக்கொண்டே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. தற்போதும் அவ்வாறான செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றது என்றார்.