கொழும்பில் இப்படியொரு இருப்பிடமா ? அடையாளமே இல்லாத மக்கள் கூட்டம் !

Published By: Priyatharshan

23 Jul, 2018 | 05:21 PM
image

“நான் (தனது ஊரைக் குறிப்பிட்டாள்) இருந்து வேலை தேடி வந்தன். சரியான வேலை கிடைக்கல. அப்பிடியும் இப்பிடியுமா சாப்பாடில்லாம தங்க இடமில்லாம கடைசியா இங்க வந்துசேந்தன். என்னை ஏண்ட நண்பிதான் இங்க கூட்டியாந்தா......”என்று கூறும் அந்தப் பெண் கறுத்து மெலிந்து நோய்வாய்ப்பட்டதுபோல் காட்சியளித்தாள். அவளிடம் அடையாள அட்டையோ, வயதைக்காட்டும் பிறப்புச்சான்றிதழோ எதுவும் இல்லை. 65 வயது மதிக்கத்தக்க அவளுக்கு வயது 45 என்ற கூறினாள். 

“இப்ப என்ன வேலை செய்யிறீங்க?” 

எம்மை வெறித்துப் பார்த்த அவள் ‘உடம்பை விக்கிறன்’ என்றாள் சிங்களத்தில். சரளமாக தமிழும் சிங்களமும் பேசக்கூடியவளாக இருந்தாள்.

கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் அந்த ஏழைகளின் குடியிருப்பு “பல்பத்தநிவாச” உள்ளது. அங்கு வாழ்ந்துவரும் சுமார் 25 குடும்பங்கள் (அவர்கள் கூறியது) சுமார் 30 வருடங்களாக இங்கு வாழ்வதாகக் கூறுகிறார்கள். நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வெவ்வேறு காரணங்களால்  சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இப்பகுதியில் சாதி, மதம், இனம்,மொழி கடந்து வாழ்க்கை நடத்தும் இவர்கள் எதையோ தொலைத்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்!?

“எனது சொந்த இடம் இரத்தினபுரி காதலித்து கலியாணம் முடிச்சன். ஊட்டில இந்த கலியாணத்த எதிர்த்தாங்க. அவங்கட ஊட்டிலயும் சேக்கல, நாங்க புழைப்ப தேடி கொழும்புக்கு வந்தா இருக்க இடம் கிடைக்கல ஏண்ட  “யாலுவ” (நண்பன்) ஒருத்தன் இங்க கொண்டாந்து உட்டான். நான் கூலி வேல செஞ்சிற்று ஒரு சின்ன கடை போட்டிருக்கன். எனக்கு ஒரு மகன். அவன ஏண்ட பள்ளிவாசல் ஒதவியோட படிக்கவைக்கிறன். என் பொண்டாட்டி கடையபாக்கிறா.” என்கிறார் அங்கு வசித்து வரும் நௌபர் (வயது 65).

இங்கு ஆண்களை விட பெண்களே அதிகமாகவுள்ளனர். சிறுபிள்ளைகள் 9 பேரும் பாடசாலை செல்லும் பிள்ளைகள் ஐவரும் உள்ளனர். இவர்களின் நாளாந்த சாராசரி வருமானம் 750 ரூபாவாக உள்ளபோதும் நாளாந்த செலவினம் தாம் உழைக்கும் வருமானத்தைப்போன்று 3 மடங்கு எனத் தெரிவிக்கின்றனர். 

கொழும்பில் பம்பலப்பிட்டி மிகமுக்கிய நகர்ப்பகுதி.  கடலின் ஓரத்தில், கடல் அலை வீட்டுக்குள் அடிக்கும் நிலையில் உள்ள இந்த வீடுகள் சில மின்குமிழால் ஒளிர்கிறது. வாகனங்களின் பற்றறிகளை வைத்து அதிலிருந்து மின்சாரம் பெற்று பயன்படுத்துகிறார்கள். 

இவர்களில் பலரும் தாம் வசிக்கும் இடங்களில் சமையல் செய்து உண்பதைவிட கடைகளிலேயேதான் அன்றாட உணவுகளைப் பெற்றுக்கொள்கின்றனர். தமக்கு 3 வேளை உணவுக்கே படாதபாடுபடும் இவர்கள் செல்லப்பிராணிகளாக நாய்கள், பூனைகளை வளர்த்து அவற்றுக்கும் உணவளிப்பதில் பின்னிற்க்கவில்லை. மிகப்பெறுமதிவாய்ந்த நாய்கூட இங்குள்ளது. அதை அவர்கள் வளர்க்கிறார்கள் என்பதையும் நம்ப முடியவில்லை.

“எனக்கு 3 பிள்ளைகள் இருக்கிறார்கள் அவங்கள எங்க சொந்தக்காரர் வீட்டில படிக்க விட்டிருக்கன். ஒரு பிள்ளையும் நானும் இங்க இருக்கிறம். புருசன் வேற இடத்தில வேல செய்யிறார். அப்பப்ப வருவார்.” என்று கூறும் சுஜித் பிரியங்கரவுக்கு வயது20.” இரண்டு மொழிகளையும் பேசிக்கொண்டு மூன்று இனங்களும் கலந்து வாழும் இந்த இடம் ஒருபக்கம் கடல் இரைச்சலையும் மறுபக்கம் புகைவண்டியின் இரைச்சலையும் சகித்துக்கொண்டு உயிர்த்திருக்கிறது. 

இங்குள்ள இன்னும் சிலர், நகரில் உள்ள தொடர்மாடி குடியிருப்புகளில் சுத்தம் செய்தல், வீடுகளில் துப்புரவு பணிகளில் ஈடுபடுதல், பழைய இரும்பு மற்றும் கார்ட்பொட் மட்டைகளை சேகரித்து விற்றுப்பிழைத்தல், இன்னும் சிலர் பிச்சை எடுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டுபணம் சம்பாதிக்கின்றனர். ‘பொதுவாக எல்லாவித தொழில்களிலும் ஈடுபடுவோம்.’ என்று கூறும் இவர்களில் பெரும்பாலானோர் தமக்கு அடையாள அட்டையில்லாததால் பல தொழில்களுக்கு செல்லாமுடியாமல் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் வாக்களிக்கிறார்கள். எப்படி?

“இங்குள்ள பலருக்கு பிறப்புச் சான்றிதழ் கூடஇல்லை. பிறந்த திகதி தெரியாதோரும் அவர்களின் தாய், தந்தையின் பெயர் தெரியாதேரும் கூட இங்கு வாழ்கின்றனர். தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் வந்து தற்காலிக அடையாள அட்டைகளை தயாரித்து தருகின்றனர்.  பின்னர் தேர்தல் நிறைவடைந்தவுடன் அதை எடுத்துச்சென்றுவிடுவார்கள்.” என்று கூறுகிறார் நதீகா சந்தமாலி.

“தேர்தல் காலம் என்றால் எமக்கு தெரியும் பலரும் வருவார்கள் வாக்குறுதிகளை தருவார்கள் அவ்வாறே அதுவும் பறந்து போய்விடும் ஆனால் இம்முறையும் அவ்வாறான வாக்குறுதிகளை வழங்கிச் சென்றுள்ளார்கள். ஆனாலும் கடந்தவாரம் இவ்விடத்தை அகற்றப்போவதாக சிலர் தெரிவித்தனர். அப்படி நடந்தால் எமக்கு வேறு இடம் தருவர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறம்.” என்கிறார் காமினி (வயது 65)

இந்த நாட்டில் கடற்கரையில் இருந்து சுமார் 200 மீற்றருக்கு அப்பால் தான் கட்டடங்கள் அமைக்கவேண்டும் என்பது சட்டம். இந்தக் குடியிருப்புகளோ கடல் தண்ணியில் இருந்து இரண்டு அடி தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடற்கரை கற்பாறைகளால் பாதுகாக்கப்பட்டுள்ளதால் அதன்மேல் இவர்கள் குடியிருப்பை அமைத்துள்ளனர். ஆரம்பத்திலே இந்தமாதிரி குடியிருப்புகள் அமைப்பதை கொழும்பு நககரசபை தடுத்திருக்கவேண்டும். ஆனால் வாக்கு வேட்டைக்காக இந்த மாதிரி குடியிருப்புகளை தக்கவைத்துள்ளனரோ என்று மக்கள் ஐயுறுகின்றனர். 

குடும்பத்தால், சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களாக கடலின் விளிம்பில் தமது வாழ்வை அமைத்துக்கொண்டிருக்கும் இவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள்தானா? ‘இருக்கு ஆனா இல்லை’ என்பதைப்போல், வாக்கு வங்கிக்கு இவர்கள் நாட்டின் பிரஜைகள்தான், சாதாரணமாக இவர்கள் இந்த நாட்டின் பிரஜைகளாக தமது அடையாளங்களை நிறுவமுடியாதவர்களாகவுள்ளனர். குடிதண்ணீர், மின்சாரம், மலசலகூடம் என எந்த அடிப்படை வசதியுமற்ற இந்த இடத்தில் வாழும் இவர்களின் குழந்தைகள் தமது குழுந்தைப்பராயத்தை அனுபவிக்க எந்த வழியும் இங்கில்லை. 

“எனக்கு எழுதுறதான் விருப்பம். ஆனா பாட்டி பள்ளிக்கூடத்துக்கு அனுப்பல” என்கிறான் அந்த சிறுவன். கொப்பியுடன் அங்கும் இங்கும் ஓடித்திரிந்த அந்தச் சிறுவன் தன் நண்பர்களுடன் எழுத தயாராகிறான். பாட்டியிடம் இதுபற்றிக்கேட்டபோது, அவனது தாயார் எங்கோ போய்விட்டதாகவும் அவனை பாடசாலைக்கு அனுப்ப யாரும் இல்லை என்பதாலும் அனுப்பவில்லை என்றாள். இங்கு வாழ்பவர்கள் தமது காலம் முடிய குழந்தைகளிடம் எதைக் கையளிக்கப்போகிறார்கள்? 

“ இங்கு எதுவும் இல்லை. சுதந்திரமாக ஒதுங்க ஒரு இடம்மட்டுமே இருக்கு” என்று கூறும் இவர்களின் அந்த இடம்  சமைப்பதற்கோ, சாப்பிடுவதற்கோ, தூங்குவதற்கோ, குழந்தைகள் வளர்வதற்கோ அருகதையற்றது. 

“இவர்களுக்கு என்னதான் வேறு இடங்களில் குடியமர வழி ஏற்படுத்திக்கொடுத்தாலும் சிறிது காலத்தின்பின் அதை விற்றுவிட்டு அல்லது கைவிட்டுவிட்டு  மீண்டும் இந்த இடங்களில் குடியமர தொடங்கிவிடுகின்றனர். அவர்களின் சில்லறைத் தொழில்களுக்கு நகர் பொருத்தமானதாக இருக்கிறது. அவர்கள் தங்குவதற்கு இடம் தேவை இப்படி தங்க ஆரம்பித்துவிடுகின்றனர். பின்னர் குடும்பமும் வந்துவிடுகிறது.” என்கிறார் பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரி ஒருவர். 

எல்லா பெரு நகரங்களிலும் சேரிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இந்தமாதிரியான ஆபத்தான சேரிப்பகுதி தோன்றுவதற்கு இடமளிகக்கூடாது. இது அந்த மக்களுக்கு மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததி, சமூகம் எல்லாவற்றுக்கும் ஆபத்தானதே.

  (வீ.பிரியதர்சன் - நியூட்டன் ) 

(பட உதவி - மயூரப்பிரியன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04