(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரனையினை கொண்டுவர ஆளும் கட்சி முயற்சிகளை மேற்கொண்டால் அதனை முழுமையாக எதிர்கொள்ள தயார் என பாராளுமன்ற உறுப்பினர்  வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சீன துறைமுக நிறுவனத்திடமிருந்து  மஹிந்த ராஜபக்ஷ 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பணிகளுக்காக நிதி பெற்றார் என்று  அண்மையில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம்  தற்போது அரசியல் காய்நகர்த்தலை மேற்கொண்டுள்ளது.

இவ்விவகாரத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ முறையான பதிலளிக்க தவறும்  பட்சத்தில்  அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டு வந்து அடுத்தக்கட்ட  நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளும் தரப்பின் முக்கிய உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.  

கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின் போதும் சீனாவிலிருந்து மஹிந்த கடன் பெற்றார் என்று கூறப்படும் குற்றச்சாட்டு  பெரிதளவில் பேசப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியினரும் இவ் விடயத்திற்கு ஆளும் தரப்பினருக்கு ஆதரவளித்தனர்.

விவாதத்தில் மஹிந்த ராஜபக்ஷ சபைக்கு வருகை தராவிடினும் அவர் தலைமைத்துவம் வகிக்கும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் எதிர் தரப்பினரது கருத்துக்களை முழுமையாக எதிர் கொண்டனர்.

பிணைமுறி விவகாரத்தின் முக்கிய  பங்காளியான பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் அமைதி காக்கும்  செயற்படும் பொழுது  சீன துறைமுக விவகாரம் தொடர்பில் அமைதி காப்பது குற்றங்களை புரிந்தமைக்கு ஒப்பானது அல்ல. 

ஆகவே மஹிந்தவிற்கு எதிராக ஆளும் தரப்பினர் நம்பிக்கையில்லா பிரேரனையினை  கொண்டு வந்தால் அதனை முழுமையாக  எதிர் கொள்ள நாம் தயார் என்றார்.