இலங்கையின் ஆரம்பநிலை சுகாதார பராமரிப்பு சேவைகளைப் பயன்படுத்துதலை அதிகரிப்பதற்காகவும், தராதரத்தை மேம்படுத்த உதவுவதற்காகவும் உலக வங்கியின் பணிப்பாளர் சபை 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. 

ஆரம்பநிலை சுகாதார பராமரிப்பு அமைப்பு முறைமையை வலுப்படுத்தும் திட்டமானது இலங்கை சுகாதாரத் துறையில் பல வருடங்களாக பெறப்பட்ட அனுபவங்கள் மற்றும் படிப்பினைகளில் இருந்து கட்டியெழுப்பப்பட்டதாகும்.  சனத்தொகை குழுமங்களில் அதிக ஆபத்துக்கொண்ட பிரிவினர் மத்தியில் தொற்றா நோய்களை இனங்காணுதல் மற்றும் அவற்றை முகாமைத்துவம் செய்தல், சனத்தொகையில் மிகவும் வறுமைக்குட்பட்ட தரப்பினரின் தேவைகளுக்கு பதிலளித்தல் ஆகியவற்றை முக்கியமாக கவனத்திற்கொண்டுள்ளது.  

தாய், சேய் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதில் கண்ட வினைத்திறன் ஆகியன உலகத்தராதரத்தைக் எய்திய நிலையில் இலங்கையின் சுகாதார முறைமையானது குறிப்பிடத்தக்க பெறுபேறை வெளிப்படுத்திநிற்கின்றது. 

ஆனபோதிலும் தெற்காசியாவிலேயே அதிவிரைவாக முதுமையடையும் சனத்தொகையை இலங்கை கொண்டிருக்கின்றது. அடுத்துவரும் 25 ஆண்டுகளில் 60ற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சனத்தொகை மாற்றமானது இலங்கையின் சுகாதாரப் பராமரிப்பு விடயத்திலும் தாக்கத்தை செலுத்துகின்றது. இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 87 வீதமானவை தொற்றா நோய்களால்  ஏற்படுபவையாகும். தமது சொந்தப் பணத்தில் இருந்து செலவிடும் தொகை மொத்த சுகாதாரத்துறை செலவீனத்தில் 38 சதவீதமாகக் காணப்படுகின்றது. இது வறியவர்களைப் பொறுத்தவரையில் மிகுந்த பாரத்தைச் சுமத்துவதாக அமைந்துள்ளது. 

' மேம்பட்டதான சுகாதாரப் பராமரிப்பை குறிப்பாக வறியவர்கள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்தத்திட்டத்தின் நடுநாயகமாக மக்களே திகழ்கின்றனர்' என உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான வதிவிடப் பணிப்பாளர் ஐடா ஸ்வராய் ரிடிகோவ் தெரிவித்தார். 'இந்த திட்டமானது நோய் அறிகுறிகளை இனங்கண்டு அதற்கான குணமளிப்புச் செயற்பாட்டை முன்னெடுப்பதாகும். இதில் சமூகம் மற்றும் ஆரம்ப நிலை சுகாதார பாராமரிப்பு மட்டங்களில்  தொற்றா நோய்களை முகாமைத்துவம் செய்கின்ற பாரச் சுமையை எதிர்கொள்வதற்காக சிறந்த வாழ்க்கை முறைமையை ஊக்குவித்தலும் உள்ளடங்கும்.'

இந்த திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சே நடைமுறைப்படுத்தும். ' இலங்கையில் ஆரம்ப நிலை சுகாதாரப் பராமரிப்பை மீளமைத்தல் : எமது முன்னேற்றத்தை காத்தல் எமது எதிர்காலத்தை தயார்ப்படுத்தல்' என்ற தலைப்பில் அண்மையில் வெளியிடப்பட்ட நிலைப்பாட்டு அறிக்கையை ஒட்டியதாகவே இந்தத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பநிலை சுகாதார பராமரிப்பு முறைமையை மீளமைத்தல் மற்றம் வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்கான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை உலகவங்கி வழங்கும்.  அத்தோடு புத்தாக்க மானியத்தினூடாக நடைமுறைக்கிடல் ஒத்தாசையையும் வழங்கும்.  

'இந்த திட்டம் இலங்கையின் ஆரம்பநிலை சுகாதாரத்துறைக்கு புத்துயிரளிக்க  வழிகாட்டியாக அமையும் அதேவேளை எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சுகாதாரத்துறை சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு நாட்டைத் தயார்ப்படுத்துவதற்கு உதவும்' என சிரேஷ்ட சுகாதார சிறப்பியலாளரும் செயலணிக்குழுவின் தலைவருமான கனாகோ யமசிடா அலென் தெரிவித்தார். 

இந்த திட்டமானது உலகவங்கியின் கிளையமைப்பான புனர்நிர்மாணம் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியின் கடனுதவியின் மூலம் நிதியளிக்கப்படுகின்றது. ஐந்தரை வருட காலத்தில் நடைமுறைப்படவுள்ள இந்த திட்டத்திற்கான கடனுதவியானது 6 வருட கருணைக் காலத்தை உள்ளடக்கிய 33 வருட முதிர்வுகாலத்தைக் கொண்டதாகும்.