இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிவரும் இலங்கை அணி மூன்று விக்கெட்டுக்களை  இழந்து 151 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன்படி நேற்று எஸ்.எஸ்.சீ. மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் இலங்கை அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந் நிலையில் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை இலங்கை அணி 277 ஓட்டங்களுடன் ஆரம்பித்தது. அகில தனஞ்சய மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் நிதமானமான ஆட்டத்தினூடாக இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை பலப்படுத்தினர். 

இதன் பின்னர் ரங்கன 35 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மஹராஜின் பந்து வீச்சில் பிடி கொடுத்து ஆட்டமிழந்து வெளியேற இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்த 338 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

பந்து வீச்சில் அசத்திய கேஷவ் மஹாராஜன் 129 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதனையடுத்து தனது முதலாவது இன்னிங்ஸுக்காக களமிறங்கிய தென்னாபிரிக்க அணி வீரர்கள் ஓட்டங்களை சேர்ப்பதற்கு பதிலாக விக்கெட்டுக்களை இழந்தனர். அதன்படி தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றை ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டு வெளியேறினர். இதன்படி அடின் மர்க்ரம் 7 ஓட்டங்களையும் டென்  எல்கர் ஓட்டம் எதையும் பெறாமலும் தியுனிஷ் டி பிரைன் மூன்று ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

போட்டியில் சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸிம் அம்லா மற்றும் டூப்பிளஸ்ஸி ஜோடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை சற்று அதிகரித்தது. இருப்பினும் தென்னாபிரிக்க அணி 70 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை அம்லா 19 ஓட்டங்களுடன் தில்ருவான் பெரேராவின் பந்து வீச்சுக்கு குசல் மெண்டீஸுடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

அடுத்தபடியாக தில்ருவான் பெரேராவின் பந்தில் சிக்கிய அணித் தலைவர் டூப்பிளஸ்ஸி 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு அதிக நேரம் தாக்கு பிடிக்காத தென்னாபிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 

இறுதியாக தென்னாபிரிக்க அணி 34.5 ஓவர்களை எதிர்கொண்டு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. தென்னாபிரிக்க அணியில் ஏழு வீரர்கள் இந்த இன்னிங்ஸில் ஒற்றை ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சில் இலங்கை  அணி சார்பாக தில்ரூவான் பெரேரா 40 ஒட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் அகில தனஞ்சய டிசில்வா 52 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும் ரங்கன ஹேரத் 34 ஒட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந் நிலையில் 214 ஓட்ட முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களான தனுஷ்க குணதிலக்க மற்றும் கருணாரத்ன ஜோடி சிறந்ததொரு அடித்தளத்தை இந்த இன்னிங்ஸிலும் இட்டது. இதன்படி இவர்கள் இருவருமாக இணைந்து 91 ஒட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

நிதானமாகவும் அசத்தலாகவும் துடுப்பெடுத்தாடிய தனுஷ்க குணதிலக்க ஆறு நான்கு ஓட்டங்கள், இரண்டு ஆறு ஓட்டங்கள் அடங்களாக 61 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மஹாராஜின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஆடுகளம் புகுந்த தனஞ்சய டிசில்வாக வந்த வேகத்திலேயே ஓட்டம் எதையும் பெறாது டக்கவுட் முறையில் மஹாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் திமுத் கருணாரத்னவுடன் இணைந்து பொறுமையாக ஆட ஆரம்பித்த குசல் மெண்டீஸ் சற்று நேரம் தாக்குபிடித்து 18 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன் பின்னர் மெத்தியூஸ் களமிறங்கி அணியின் ஓட்ட எண்ணிக்கையை கருணாரத்னவுடன் இணைந்து குவிக்க ஆரம்பித்தார். அதற்கிணங்க இரண்டாம் நாள் ஆட்ட முடிவின் போது இலங்கை அணி  மூன்று விக்கெட்டுக்களை இழந்து 151 ஒட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

திமுத் கருணாரத்ன எட்டு நான்கு ஓட்டங்கள் அடங்களாக 59 ஓட்டங்களுடனும் அஞ்சலோ மெத்தியூஸ் 12 ஒட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர். இதன் மூலம் இலங்கை அணி 365 என்ற ஓட்ட எண்ணிக்கையில் முன்னிலையிலுள்ளது.

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளைய தினம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இலங்கை இப்போட்டியை வெற்றி கொண்டு தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.