தெரு நாய்களுக்கு சப்பாத்தி கொடுத்துவிட்டு, தனக்கு பழைய சோறு கொடுத்த  ஆத்திரத்தில் கட்டட காவலாளியை யாசகர்  ஒருவர் குத்திக்கொன்ற சம்பவம் நவிமும்பை அருகே நடந்துள்ளது.

மும்பை -  துர்பே பொன்சாரி கிராமத்தை சேர்ந்தவர் சார்யு பிரசாத் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டுக்கு தினசரி அந்த பகுதியை சேர்ந்த யாசகர் உணவு கேட்டு வருவது வழக்கம்.

குறித்த நபருக்கு  சார்யு பிரசாத் தனது வீட்டில் சமைத்த பழைய சோற்றை கொடுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். 

அதே நேரத்தில் அங்கு சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு சார்யு பிரசாத் சப்பாத்தி கொடுத்து வந்துள்ளார்.

இதை நாள்தோறும் கவனித்த யாசகர் தன்னை  சார்யு பிரசாத் தெருநாயை விட கேவலமாக நடத்துவதாக கருதினார்.

இந்தநிலையில் நேற்று முன்தினமும் சார்யு பிரசாத் வீட்டுக்கு யாசகர் சென்ற போது வழக்கம் போல வீட்டில் இருந்த பழைய உணவை அவருக்கு கொடுத்துவிட்டு, தெருநாய்களுக்கு சப்பாத்திகள் இட்டுள்ளார்.

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த யாசகர் கத்தியால் சார்யு பிரசாத்தை சரமாரியாக குத்தினார்.

சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் யாசகர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதில், பலத்த காயம் அடைந்து இரத்தவெள்ளத்தில் துடித்த சார்யு பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த துர்பே எம்.ஐ.டி.சி. பொலிஸார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.