அமெரிக்காவில் ஏற்ப்ட்ட படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிசவுரி மாநிலம், பிரான்சன் அருகே அமைந்துள்ள சுற்றுலா தலமான டேபிள் ராக் ஏரியில் நேற்று சுற்றுலாப் பயணிகள் சிலர் படகு சவாரி செய்தனர்.

29 பயணிகள், 2 படகோட்டிகளுடன் சென்ற அந்த படகு திடீரென பலத்த காற்று வீசியதால் நிலைதடுமாறி ஏரியில் மூழ்கியது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில், 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு. 14 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தீவிர தேடுதலுக்குப் பின்னர் மீதமுள்ள 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரிகத்துள்ளது. அத்தோடு உயிரிழந்தவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இதற்கிடையே மீட்கப்பட்டவர்களில் 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.