(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி )

வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களே எஞ்சியிருக்கின்ற நிலையில், கடந்த நான்கு வருடத்திற்கு மேலான காலமாக வடக்கு மாகாண சபையானது பொது மக்களது நிதியினை ஊழல், மோசடிகள் செய்திருப்பினும் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதது தொடர்பில் அமைச்சர் பைஸர் முஸ்தபா தனது அவதானத்தினை செலுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற இலஞ்சம் ஊழல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில். 

ஏற்கனவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற அமைச்சர்கள் தொடர்பில் மீள் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கும்,  அந்த அமைச்சர்களை பதவி நீக்கம் செய்த பின்னர், நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் தொடர்பிலும் ஊழல், மோசடி குற்றச்சாட்டகள் சுமத்தப்பட்டு வருவதால், அவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். 

அத்துடன், தற்போதைய வடக்கு மாகாண சபை ஆட்சிபீடமேறிய நாள் முதற்கொண்டு, மக்களது நிதி எந்தெந்நத வகையில் செலவிடப்பட்டுள்ளன? என்னென்ன அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன? என்னென்ன வாழ்வாதாரத் திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன? போன்ற அனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஆய்வுகள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை  அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் முன்வைக்க விரும்புகின்றேன் என்றார்.