சிம்பாப்வேயிற்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானின் பர்கார் ஜமான் இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார்.

புலாவயோவில் இடம்பெற்றுவரும் நான்காவது ஒருநாள்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது.

பாகிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பர்கார் ஜமான் இமாம் உல் ஹக் இருவரும்  இணைந்து முதலாவது விக்கெட்டிற்காக 304 ஓட்டங்களை பெற்று முதலாவது விக்கெட்டிற்காக அதிக ஓட்டங்களை பெற்ற சாதனையை ஏற்படுத்தினர்.

இமாம் உல் ஹக் 122 பந்துகளில் 113 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த அதேவேளை தொடர்ந்து ஆடிய பர்கார் ஜமான் ஆட்டமிழக்காமல் 156 பந்துகளில் 210 ஓட்டங்களை பெற்று பாக்கிஸ்தானிற்காக ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதலாவது வீரர் என்ற சாதனையை  ஏற்படுத்தினார்.

ஜமான் ஐந்து சிக்சர்கள் மற்றும் 24 பவுண்டரிகளுடன்  210 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய சதத்தின் மூலம் ஓருநாள் போட்டிகளில் இரட்டை சதம் பெற்ற ஆறாவது வீரர் என்ற சாதனையை ஜமான் ஏற்படுத்தியுள்ளார்

இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக் , ரோகிட் சர்மா, மேற்கிந்திய அணியின் கிறிஸ்கெய்ல், நியுசிலாந்தின் மார்ட்டின் குப்தில் ஆகியோர் ஏற்கனவே இரட்டை சதம் பெற்றுள்ளனர்