இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களை தலைமை நீதிபதி பார்வையிட்டப்பின் 25 நாள்களுக்கு பிறகு பாதுகாப்பாக அகற்றுப்பட்டது.

ராமேஸ்வரம், தங்கச்சிமடம் அந்தோணியார் புரத்தில் வசித்து வரும் எடிசன் என்பவரின் வீட்டில் கடந்த மாதம் 25 ஆம் திகதி கழிவறைக்கு குழி தோண்டியபோது இரும்புப் பெட்டிகள் இருப்பதை அறிந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதனையடுத்து அப்பகுதிக்கு வந்த பொலிஸார் குழியில் இருந்து வெடிபொருட்களை பாதுகாப்பாக மீட்டு துப்பாக்கி தோட்டாக்கள் ராமநாதபுரம் ஆயுதக்கிடங்கு பாதுகாப்பாக கொண்டு சென்று வைக்கப்பட்டனர்.

இதனை அடுத்து திருவாடனை நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் அந்தோணியார்புரம்  பகுதிக்கு நேரில் சென்று வெடிகுண்டுகளை ஆய்வு செய்தார். அதன்பின் சென்னையிலிருந்து வெடிகுண்டு மற்றும் பெட்ரோலிய பாதுகாப்பு குழு அதிகாரிகள் நேரில் வந்து வெடிகுண்டுகளை ஆய்வு செய்தனர்.

 இந்நிலையில் தொடர்ந்து வெடிகுண்டுகள் இருப்பதின் காரணமாக தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதால் உடனடியாக அகற்ற கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் வெடிகுண்டுகளை அகற்ற நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் இருந்து அனுமதி கிடைத்தது.

இந்நிலையில் இன்று சென்னை பெட்ரோல் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு குழு அதிகாரியின் சேச்உசேன் தலைமையில் வெடிகுண்டுகளை அகற்றுவதற்காக தற்போது பணிகள் நடைபெறுகின்றது.

அகற்றப்படும் வெடிகுண்டுகள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு பாதுகாப்பு கிடங்கிற்கு  கொண்டு செல்லப்பட்டது. இன்று அந்தோணியார்புரம் பகுதிக்கு சென்ற ராமநாதபுரம் மாவட்ட தலைமை நீதிபதி கயல்விழி வெடிபொருட்களை மற்றும் வெடிகுண்டுகளை பார்வையிட்டார்.