(இரோஷா வேலு)

மத்தளை மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற திட்டங்களின் தோல்வி தன்மைக் குறித்து கூட்டு எதிர்கட்சியினரிடம் ஊடகங்கள் ஏன்? கேள்வி எழுப்புவதில்லை என வினா எழுப்பிய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி உண்மையா அல்லது உண்மைக்கு புறம்பானதா? என்று கூட ஊடகங்கள் கேள்வியெழுப்பவில்லை எனவும் ஊடகங்களை சாடினார். 

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற 1150 தொழில் கல்வி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது குறித்து அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

"2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற அன்றிலிருந்தே நாட்டின் அபிவிருத்திக்கான பல நல்ல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்.  இன்றைய அரசாங்கத்திடம் போதைவஸ்த்து பொருட்கள் பிடிப்பட்டனவா? என கேள்வியெழுப்பும் ஊடங்கள். கடந்த காலங்களை விட தற்போது நாட்டுக்கு கடத்தப்படும் போதைப்பொருட்கள் அதிகம் கைப்பற்றப்படுகின்றனவே. இது நாட்டுக்கு சார்பான விடயமே என்பது குறித்து ஆராய்வது இல்லை. 

எம்மிடம் விசித்திரமான கேள்விகளை எழும்பும் ஊடகங்கள் கூட்டு எதிர்கட்சியினரிடம் மத்தளை மற்றும் அம்பாந்தோட்டை துறைமுக திட்டங்களின் தோல்வி தன்மை குறித்தும் வினா எழுப்புவதில்லை. அதேபோல் நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி உண்மையா? அல்லது தவறா? என்று குறித்து கூட யாரும் கேட்பதாக இல்லை. 

நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளும் எந்த நல்ல திட்டங்கள் குறித்தும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதில் ஊடகங்கள் பின்னிற்கின்றன. இது வேதனையான விடயம் என்றாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையில் பல்வேறு நன்மைத் தரும் திட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டுத் தான் உள்ளன. 

அந்த வகையிலேயே  13 வருடங்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட இந்த தொழில் கல்வி ஆசிரிய நியமனங்களும் பிரதமரின் ஆலோசனைக்கமைவாகவே மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் நாடு தளுவிய ரீதியில் அம்பியுலன்ஸ் சேவை தொடர்பான திட்டமொன்றும் நடைமுறைக்கு வரும். இவ்வாறு கல்வி மற்றும் சுகாதார துறையில் பல்வேறு திட்டங்கள் பூர்த்தியாகியுள்ளன. 

அதேபோல் இந்த உயர்த்தரத்திற்கான தொழில் கல்வி முறையானது சாதாரணத் தரத்துடன் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களது எதிர்காலத்தை குறித்த பயத்தை அகற்றி,அவர்களின் தொழில்வாய்ப்பினை உறுதிப்படுத்தும்.

இதுபோல் நல்லாட்சி அரசாங்கத்தில் மேற்கொள்ளப்படும் கிராம அபிவிருத்தி திட்டத்தினூடாக 5,000 மில்லியன் ரூபா பெறுமதியில் கிராமங்கள்தோரும் காணப்படும் குறைப்பாடுகளை நிறைவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.