மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 38ஆவது நாளாகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில்  இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமை தாங்கிவருகின்றார்.

நேற்றைய அகழ்வு பணியின்போது மூன்று எலும்புகூடுகள் குழிக்குள் இருந்து  வெளியேற்றப்பட்டு இதுவரைக்கும் 52 பெட்டிகளில் மனித எச்சங்கள், எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் அடைக்கப்பட்டு பாதுகாப்புக்கருதி மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறையொன்றில் வைக்கப்பட்டுள்ளன.

இன்றைய அகழ்வு பணியானது நண்பகல் 12 மணியுடன் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் திங்கள் கிழமை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.